மஹாபெரியவாளின் பாதையிலே - 9

குரு கடாக்ஷம்
குரு என்பவர் ஒரு தனி மனிதர் கிடையாது.குரு என்பவர் ஒரு சக்தி. பல ஜென்மங்களாக ஆத்ம விசாரம் ஏற்பட்டு ஏதோ ஒரு பிறவியில் அது சித்திக்கும்.
இது ஒரு குருவின் வாயிலாக ஏற்படலாம். அல்லது இறைவனே குருவாக அவதரித்து அந்த குரு தனக்கென்று சில பணிகளை வகுத்து கொள்வார். அப்பொழுது பல ஜென்மங்களாக ஏக்கத்தில் தவிக்கும் ஆத்மா அவர் மனக்கண்ணில் தெரியும்..பிறப்பில் இருந்தே அந்த ஆத்மாவை கண்காணித்து கொண்டிருப்பார்.
மீதி இருக்கும் கர்மாக்களை கழித்து சுத்த ஆத்மாவாக பரிமளிக்க வைத்து கழிந்த பிறகு தான் கையில் எடுத்து ஆத்ம விசார ஏக்கத்தை தனிப்பார்..
அந்த குருவின் அருளால் அவனுக்குள் சரீர சுத்தி ஆத்ம சுத்தி ஏற்படும். இந்த இரண்டு சுத்திகளும் அவனுக்கு சித்தித்துவிட்டால் அவனுடைய ஆத்மா பிரகாசிக்க ஆரம்பிக்கும்.
அவனது முகத்தில் எல்லையில்லா பிரபஞ்சத்தின் அழகும் பிரகாசமும் பிரதிபலிக்கும். அவனை அறியாமலேயே அவனை சுற்றி அற்புதங்கள் நிகழ ஆரம்பிக்கும்.
அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் சபையேறும்.அவன் செய்யும் ஓவ்வொரு பிரார்த்தனையும் பிரபஞ்சத்தை எட்டிவிடும்.இவனுக்கும் பிரபஞ்சத்திற்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிடும். .
இந்த மாற்றம் எல்லோருக்கும் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு தான் இந்த மாற்றம் வெளிப்பட்டு பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படும். 84 லக்ஷம் உயிரினங்களில் மிகவும் உயர்ந்த உயிரினம் மனிதன். இந்த மனிதப்பிறவி எப்பொழுதாவது ஒரு முறை கிடைக்கும் ஒரு வரப்பிரசாதம்.
அந்த ஒரு மனிதப்பிறவியில் எப்பொழுதாவது ஒரு முறை குரு கடாக்ஷம் கிடைக்கும்.குரு கடாக்ஷம் கிடைத்து விட்டால் நிச்சயம் பிறவி கிடையாது. அந்த பிறவியிலேயே லோக ஷேமத்திற்காக உழைத்து எல்லோருடைய கர்மாக்களையும் தான் பெற்று கழித்து கரையேற்றும் பாக்கியத்தை அந்த ஆத்மா பெறுகிறது.
ஒரு குருவின் காலடியில் கிடைக்கும் பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்து விடாது.ஒரு சிலருக்கு தான் இந்த பாக்கியம் கிடைக்கும். குருவிற்கு ,மிகவும் அருகாமையில் இருக்கும் பொழுது குருவின் மூச்சு காற்று உங்கள்மேல் படும் பொழுதும் அல்லது குருவின் உடலில் இருந்து வெளிப்படும் இறை பிரபஞ்ச கதிர்கள் உங்கள் உடலின் மேல் பாயும் பொழுதோ உங்களுக்குள் ஒரு சக்தி பிறப்பதை நீங்கள் உணர்வீர்கள்.
இப்பொழுதான் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை தலைக்கு கொண்டு சென்று விடாதீர்கள். தலைக்கு கொண்டுசெல்லும் பொழுது உங்கள் ஆணவம் வெளிப்பட்டு விடும். இந்த ஆணவம் உங்கள் குருவிற்கே சமயத்தில் சவாலாக அமைந்து விடும்.அப்பொழுது குரு தன்னுடைய ஆசீர்வதிக்கும் கையை உங்கள் சிரசின் மேலிருந்து எடுத்து விடுவார்.
அந்த அனுபவம் எப்படி இருக்கும் தெரியுமா? வானத்தில் இருந்து உங்களை யாராவது கீழே தள்ளி விட்டால் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்.?அப்படி இருக்கும் குரு உங்கள் சிரசின் மேல் வைத்திருந்த கையை எடுத்து விட்டால். இந்த குரு கடாக்ஷம் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் அமைந்து விடாது.தயவு செய்து இதை தொலைத்து விடாதீர்கள்.,
இந்த குரு கடாக்ஷம் நாளையும் தொடரும்.
என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்
GR மாமா