Featured Posts

மஹாபெரியவாளின் பாதையிலே- 12


லௌகீக விசாரம் -ஆத்ம விசாரம் குருவின் பாடங்கள் - ஆத்ம பரமாத்ம சந்திப்பு

லௌகீக விசாரம் என்பது உலகத்தில் நீங்கள் வாழ்வதற்கு உண்டான வழியை தேடி அலைவது. ஆத்ம விசாரம் என்பது உங்கள் சுயத்தை அறிவது.

சுயம் என்றால் என்ன?

எந்த ஜென்மத்திலும் “நீங்கள்” என்பது உங்கள் ஆத்மா மட்டுமே. ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒரு உடலை எடுத்து பிறக்கிறீர்கள். அந்த ஜென்மத்தின் இறுதியில் அந்த உடலை விட்டு விட்டு அடுத்த பிறவியில் வேறு ஒரு உடலை தேடுகிறீர்கள். ஒவ்வொரு நாளும் நாம் போட்டு கழற்றும் சட்டையை போன்றது நாம் எடுக்கும் உடல்... உடல் அழிவது. ஆத்மா அழிவில்லாதது.

உங்கள் உடலை இந்த ஆத்மா வாழ்வதற்கு ஏற்ற ஒரு கோவிலாக மாற்றினால் உங்கள் ஆத்மா இந்த பிறவியில் மட்டுமல்ல அடுத்த பிறவியிலும் ஒரு நல்ல கர்ப்பத்தில் உங்களை துயில் கொள்ள வைக்கும்..

உங்களுக்கு சுயத்தை அறியும் ஞானம் பிறந்து விட்டால் ,உங்கள் ஆத்மா உங்களுக்கு தரிசனம் கொடுக்கும். உங்களின் ஆத்மா பற்றிய பல கேள்விகளுக்கு பதில் கிடைத்து விடும்..

சுயம் என்பது எந்த லௌகீக சம்பந்தமும் இல்லாமல் இறை சம்பந்தம் மட்டுமே கொண்டது.. அதுதான் உங்கள் ஆத்மா ? உங்கள் பணம் புகழ் படிப்பு இவைகள் எதுவுமே நீங்கள் இல்லை. இறந்தவுடன் இவைகள் எதுவுமே கூட வராது. உங்கள் பாவ புண்ணியங்கள் மட்டுமே ஆத்மாவில் பதிந்து உங்களுடன் வரும்.

ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உயிர் பிரியும் நேரத்தில் உங்கள் மனது எதை நினைத்து கொண்டிருக்கிறதோ அதை அடுத்த பிறவியில் அடைவீர்கள். இந்த நினைவுகள் கூட உங்களுடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப அமையும்.

சாவின் தருவாயில் இந்த இறை சிந்தனைகள் வரவே வராது. அதனால் தான் ஆன்மீகத்தில் ஒன்று சொல்வார்கள் "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று.

நம் முன்னோர்கள் நமக்கு பல பாடங்களை சொல்லி சென்றிருக்கிறார்கள். தினமும் ஸ்லோகங்கள் சொல்வது ஜெபங்கள் ஜெபிப்பது. ஸ்ரீராம ஜெயம் எழுதுவது இந்த அப்பியாசங்கள் எல்லாமே நம் மனதுக்குள் பதிந்து விடும்.

இறக்கும் தருவாயில் நம் நினைவு தப்பினாலும் நம் மனம் நம்மையும் அறியாமல் இறை நாமத்தை சொல்லிக்கொண்டே இருக்கும்.

இதுமட்டுமல்ல நாம் ஆத்மார்த்தமாக சொல்லும் ஒவ்வொரு நல்ல சொல்லும் நம் மனதில் ஆழத்தில் பதிந்து விடும்.இந்த ஸ்லோகங்கள் நல்ல சொற்கள் அனைத்துமே சரியான நேரத்தில் நம்மை இறைவனுடன் தொடர்பு படுத்திவிடும்.

நினைவுடன் நல்ல நிலையில் இருக்கும் பொழுதே இறைவனை ஜெபித்து கொண்டே இருந்தால் சாகும் தருவாயில் நாம் இறைவனை நினைக்க மறந்தாலும் இறைவன் நம்மை நினைவில் வைத்துக்கொண்டு வந்து அழைத்து செல்வான் என்பது மஹான்களின் அனுபவ உண்மை..

ஆத்மாவும் பரமாத்மாவும்

ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் வரை மட்டுமே குழந்தை இறைவனின் தொடர்பில் இருக்கும். அந்த இறை அனுபவத்தை அனுபவித்து கொண்டே குழந்தை தாயின் கருவறையில் தூங்கிக்கொண்டே இருக்கும்.

இறைவனும் குழந்தையுடன் விளையாடுவான். ஏனென்றால் அவன் தானே ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் தந்தை.

குழந்தை பத்தாவது மாதம் தாயின் கருப்பையில் இருந்து வெளியே வந்து பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு இறை சம்பந்தம் அற்றுப்போய் விடுகிறது. அந்த நொடியில் குழந்தை அழ ஆரம்பித்து விடுகிறது. பிறகு வாழ் நாள் முழுவதும் அழுகை தான்.

குழந்தை பிறந்தவுடன் இழந்த தன்னுடைய இறை சம்பந்தத்தை ஏக்கத்துடன் வாழ்க்கையில் தேட ஆரம்பிக்கும். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு பொருளை தேடி ஆராய்ந்து பார்க்கிறது. அது பொன்னாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம். இந்த தேடுதலை ஆன்மாவின் ஏக்கம் என்று கூட சொல்லலாம்.

இன்னுமும் என்னென்னவோ எல்லாவற்றிலும் தான் தொலைத்தது இருக்குமோ என்று தேடுகிறது. பிறவியின் இறுதியில் பிராணன் பிரியும் தருவாயில் தான் மீண்டும் அந்த ஆத்மாவிற்கு பரமாத்மாவின் ஞாபகம் வருகிறது..

தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது அனுபவித்த இறை அனுபவம் பிரசவத்தின் பொழுது தொலைந்து போகிறது. இந்த பூமியில் பிறந்து ஆயுட் காலம் முழுவதும் தேடியும் அந்த இறை அனுபவம் கிட்டாமல் ஜென்மம் முடியும்.

அப்படி ஜென்மம் முடியும் நேரத்தில் மீண்டும் அந்த இறைவனை கண்டு இறை அனுபவத்தை அனுபவிக்கும்.. இந்த நிலயில் இறைவன் அந்த ஆத்மாவிற்கு தன்னுடைய தரிசனத்தை காண்பிப்பான்.

நினைத்துப் பாருங்கள் எப்படி ஒரு சந்தோஷம் வரும் அந்த ஆத்மாவிற்கு. அந்த நேரத்தில் ஒரு தாயை தொலைத்த குழந்தையின் மன நிலைதான் அந்த ஆத்மாவிற்கும். தாயை கண்ட சந்தோஷத்தில் அந்த குழந்தைக்கு கோபம் வரும்.. கோபத்தில் செல்லமாக அந்த தாயை கூட அடிக்கும். அப்பொழுது அந்த தாய் குழந்தையை கட்டி அனைத்து முத்தமிட்டு அழுவாள். அப்படிதான் இந்த ஆத்ம பரமாத்மா சந்திப்பு..

ஒரு மனிதன் உயிருடன் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது உடலும் முகமும் அஷ்ட கோணலாக மாறி மிகவும் விகாரமாக இருப்பான். ஆனால் மரணம் என்ற ஒன்று நிகழ்ந்து விட்டால் அந்த முகம் எவ்வளவு சாந்தமாகி விடுகிறது. இதற்கு காரணம் அந்த ஆத்மா இறக்கும் தருவாயில் தான் தொலைத்த இறைவனை தரிசனம் செய்து விடுகிறது.

பரமாத்மாவை தொலைத்த ஆத்மா மீண்டும் பரமாத்மாவை பார்த்தவுடன் சந்தோஷத்தில் அணைத்து உடல் உபாதைகளையும் மறந்து விடும்.உடலும் மனமும் சாந்தமாகி விடுகிறது. உயிரும் சந்தோஷமாக பிரிந்து விடுகிறது.

உங்கள் பரமாத்மா சம்பந்தத்தை நினைத்து நினைத்து அசை போட்டுக்கொண்டே இருங்கள். உங்களுக்கு ஆத்ம விசாரம் ஆரம்பித்து விடும். உங்களுடைய உள்நோக்கிய பயணம் ஆரம்பித்து விடும்.

நாளைய பதிவில் ஆத்மா தரிசிக்கும் பரமாத்மா பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த ஆத்ம பரமாத்ம சந்திப்பு எப்படி நிகழும் ? அவர்களுக்குள் அப்பொழுது நிகழும் சம்பாஷணை விவரங்கள் பற்றி நாளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆத்ம விசாரம் இன்னும் தொடரும்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்

GR மாமா

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square