top of page
Featured Posts

மஹாபெரியவாளின் பாதையிலே- 13

ஆத்ம விசாரம் - இறை தரிசனம்

நேற்றைய பதிவில், ஒவ்வொரு ஆத்மாவிற்கும் இறைவன் தரிசனம் கொடுத்து ஆத்மாவின் ஏக்கத்தை தணித்து சாந்தப்படுத்துவான் என்பதை பார்த்தோம்.. அதனால் தான் பிரேதத்தின் முகத்தில் இருந்த விஹாரம் தணிந்து முகத்தில் சாந்தம் ஏற்பட்டு விடுகிறது. என்பதையும் பார்த்தோம்.

நம் எல்லோருக்குமே இந்த அனுபவம் இருக்கும்..

நமக்கே ஏதாவது ஒரு பிரச்சனை உதவிக்கு யாருமே இல்லை என்ற நிலையில் நாம் என்ன செய்கிறோம். இரண்டு கைகளையும் வானத்தை பார்த்து தூக்கி இறைவா என்று அழைக்கிறோம். இதை நமக்கு யார் சொல்லிக்கொடுத்தார்கள்.

ஆனால் நம்மை அறியாமலேயே வானத்தை நோக்கி பார்த்து ஏங்குகிறோமே. காரணம் நாம் இறைவனின் ஒரு அங்கம்.. நம்முடைய சொந்த வீடு வானத்தில் தான் இருக்கிறது.

ஒவ்வொரு ஆத்மாவும் இந்த பூலோகத்தில் பிறந்து ஆத்மாவை புனிதமடைய செய்து இறைவனின் திருவடிகளை அடைய வேண்டும்.

இதைத்தான் இறைவனும் எதிர்பார்க்கிறான். நம்முடைய பிறப்பின் காரணமே இதுதான். ஆனால் இதை எல்லாம் மறந்து இந்த பூலோகத்தில் திரும்ப திரும்ப பிறந்து கொண்டே இருக்கிறோம்.

இப்பொழுது ஆத்மாவிற்கு பரமாத்மா காண்பிக்கும் தரிசனம்

இங்கு வாழும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் இறைவனே தாய் தந்தை.ஒரு ஆத்மா இறைவனை அழைக்கும் பொழுது பெற்றோர் என்ற உரிமையில் ஒருமையில் தான் அழைக்கும். இறைவன் அல்லது பரமாத்மா. இருவரும் ஒருவரே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இறைவனை நம்முடைய கஷ்ட காலங்களில் “இறைவனுக்கு கண்ணே இல்லையா? இறைவன் கொடுமைக்காரன் ? என்றெல்லாம் வசவு பாடுகிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? இறைவன் தனக்கு ஒப்பில்லாத கருணா சாகரன்.

நமக்கு எப்படி கை கால்கள் உடலின் ஒரு பகுதியோ அதே போல் இறைவனுக்கு ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனின் உடலின் ஒரு அங்கம். ஒவ்வொரு ஆத்மாவும் இறைவனின் சொத்து. இறைவனின் தலையாய பணியே ஒவ்வொரு ஆத்மாவையும் புனிதப்படுத்தி மீண்டும் தன்னுடன் இணைத்து கொள்வதே ஆகும்.

இதற்காக ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு உடலை எடுத்து இந்த பூலோகத்தில் பிறக்கிறது.. அப்பொழுது அந்த உடலின் இதயத்தின் ஒரு மூலையில் ஒரு நெல்லின் முனையை நூறு மடங்காக பிரித்தால் ஒரு சிறு துகள் அளவு கிடைக்குமே. ,அந்த சிறிய துகள் அளவு ஒவ்வொரு ஆத்மாவின் கூடவே வாழ்ந்து கொண்டிருப்பார். அந்த ஆத்மா அந்த உடலை வைத்துக்கொண்டு செய்யும் செயல்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருப்பார் இறைவன்..

நாம் நல்ல செயல்களை செய்யும் பொழுது நமக்குள் குடிகொண்டிருக்கும் இறைவன் மகிழ்ந்து போய் ஆனந்த கண்ணீர் வடிப்பான். நாம் பாவ செயல்கள் செய்யும் பொழுது கவலையுடன் கண்ணீர் வடிப்பான்.

இறைவன் சந்தோஷத்தில் கண்ணீர் வடிக்கும் பொழுது நம் கண்ணிலும் கண்ணீர் வழியும்.. இறைவனின் ஆனந்தம் நம் முகத்திலும் தெரியும். .

உதாரணத்திற்கு இப்பொழுது ஐந்து நாட்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நாம் செய்த பிரார்த்தனை நமக்கு ஒரு சுகமான அனுபவத்தை இன்றும் கொடுத்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. இறைவன் கவலையோடு வடிக்கும் கண்ணீர் நம்முடைய பாவ கணக்கில் சேர்ந்து விடுகிறது.

பரமாத்ம தரிசனம்

ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு உடலை எடுத்து வாழ்ந்து முடித்து பிராணன் போகும் சமயத்தில் ஹார்த்த ரூபத்தில் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இறைவன், தவிக்கும் அந்த ஆத்மாவிற்கு தன்னுடைய திருமேனியின் ஒளியை காண்பித்து தரிசனம் காண வைப்பான்.

அப்பொழுது துடித்து தவிக்கும் ஆத்மா ஒரு தாயை கண்ட குழந்தை போல சந்தோஷப்படும்.. முகத்தில் ஒரு சாந்தம் வந்துவிடும். அந்த நொடி தான் ஆத்மா உடலை விட்டு வெளியேறும்.

அந்த சில நொடிகளில் ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் நிகழும் சம்பாஷணை இதோ உங்களுக்காக:

ஆத்மா:(கண்களில் கண்ணீர் பொங்கும் சந்தோஷத்துடன் ) பகவானே ஆண்டவா என்னை தனியாக தவிக்கவிட்டு இத்தனை நாளும் எங்கே போயிருந்தே.

பரமாத்மா: நீ தான் இத்தனை நாளும் என்னை மறந்து பிறப்பின் லக்ஷியத்தையே மறந்து ஒவ்வொரு ஜென்மாவிலும் பிறவியெடுத்து பாவங்களை செய்து கொண்டிருந்தாய்.. எவ்வளவு பிறவிகள் எடுத்து விட்டாய். இது உனக்கு எத்தனாவது பிறவி தெரியுமா? ஒவ்வொரு பிறவியிலும் பிராணன் போகும் பொழுது மட்டும் என் ஞாபகம் உனக்கு வருது.

இந்த பிறவியிலாவது நீ என்னிடம் வந்து விடுவாய் என்று நம்பிக்கையாக இருந்தேன். இந்த பிறவியிலும் உன்னையும் ஏமாத்திண்டு என்னையும் ஏமாத்திட்டே.

நீ என்னை ஒவ்வொரு பிறவியிலும் மறந்து விடுகிறாய். ஆனால் நானோ உன்னை மறக்காமல் ஞாபகம் வைத்து கொண்டு உன்னுடனேயே பயணிக்கிறேன். ஒவ்வொரு ஜென்மாவிலும் உன் இதயத்தில் வாசம் செய்து கொண்டே வாழ்கிறேன்.

ஏதாவது ஒரு ஜென்மத்தில் என் ஞாபகம் வந்து உன் வாழ்க்கையின் லக்ஷியத்தை உணர்ந்து என்னை வந்து அடைய மாட்டாயா என்ற ஏக்கம் தான். நீ என்னை கருணையற்றவன் என்று திட்டுகிறாய். யார் கருணை அற்றவன் என்பதை கொஞ்சம் சிந்தித்து பார். உனக்கு உண்மை புரியும்.

அண்ட சராசரத்தையும் ஆளும் பரமாத்மா ஒரு ஆத்மாவின் நிலைக்கு இறங்கி வந்து பேசுகிறது என்றால் நாம் எங்கே இருக்கிறோம். அவன் எங்கே இருக்கிறான் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.

நமக்கு கர்வமும் தலை கனமும் வரலாமா. என்ன சாதித்து விட்டோம் அப்படி கர்வம் கொள்வதற்கு..

மண்ணோடு மண்ணாக அழுகி மக்கிப்போகும் இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். சீராட்டி போற்றி பாராட்டி மகிழ்கிறோம்.ஏதோ இந்த உடல் என்றும் சாஸ்வதம் போல.

ஆனால் என்றுமே சாஸ்வதமாக நம்முடனே பயணிக்கும் ஆத்மாவை மறந்து விடுகிறோம். ஆத்மாவை மறந்தால் இறைவனை மறந்ததிற்கு சமம். பழியை அடுத்தவர்கள் மேல் போடுவதுதானே நம் வழக்கம்.

இனி சம்பாஷணைக்கு வருவோம்

ஆத்மா: அப்போ என்னை நீ உன்னோட கூட்டிண்டு போக மாட்டாயா என்று ஏமாற்றத்துடன் அழுது கொண்டே ஆத்மா இறைவனை பார்த்து கேட்கிறது.

பரமாத்மா: நீ இன்னும் புனித ஆத்மாவாக மாறவில்லையே. இன்னும் ஒரு பிறவி எடுத்து உன்னை புனிதமாக்கிண்டு என்னை வந்து சேர் .

ஆத்மா: ஐயையோ இன்னும் ஒரு பிறவியா? எனக்கு வேண்டவே வேண்டாம். நான் இன்னும் ஒரு பிறவி எடுக்கமாட்டேன். இந்த கலிகாலத்தில் என்னால் வாழவே முடியாது என்னை இப்போவே உன்னோடு கூட்டிண்டு போ என்று இறைவனின் காலை கட்டிக்கொண்டு அழும். .எனக்கு மிகவும் பயமா இருக்கு. காட்டில் இருக்கும் விலங்குகளை போல் இருக்கு வாழ்கை. நான் பிறக்க மாட்டேன்.

பாரமாத்மா: (அழுது காலை கட்டிக்கொண்டிருக்கும் ஆத்மாவிற்கு ஒரு சமாதானம் சொல்கிறார்). சரி நான் சொல்வதை கேள். நீ ஒரு பிறவியை எடு. வாழ்ந்து பார். உன்னால் எப்பொழுது வாழமுடியவில்லை என்று தோன்றுகிறதோ அப்பொழுது இரண்டு கைகளையும் தூக்கி “என்னால் முடியவில்லை இறைவா என்னை கூட்டி சென்று விடு என்று என்னை அழைத்தால் நான் உடனே வந்து உன்னை கைதூக்கி அணைத்து எடுத்து கொள்வேன். இதைத்தான் சரணாகதி என்கிறோம் சரணாகதி இங்குதான் மலர்ந்தது

ஆத்மா: என்னோட பாவம் இன்னும் இருக்கிறது என்று சொல்வாயே.

பரமாத்மா : எப்போ உன்னால் முடியலை என்று இரண்டு கைகளையும் தூக்கி என்னிடம் சரணாகதி செய்து விடுகிறாயோ அப்பொழுதே உன் பாவ புண்ணியங்களை எரித்து என்னுடன் அழைத்து சென்று விடுவேன்.

நீ என்னோட சொத்துடா. நீ என்னை அடைய முயற்சிக்கும் முயற்சியை விட நான் உன்னை அடைய எடுக்கும் முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இதற்குத்தான் உன்னோட ஒவ்வொரு பிறவியிலும் உன்னோடைய வாழ்ந்துண்டு இருக்கேன்.

போ போய் ஒரு ஜென்மம் எடுத்து இந்த ஜென்மத்திலாவது என்னிடம் வந்து சேர். நான் உனக்காக உன்னோட இதயத்தில் ஹார்த்த ரூபத்தில் இருந்து உன்னை கவனிச்சுண்டே இருக்கேன். சமத்தா ஒரு பிறவி எடுத்து வாழ்ந்துட்டு வா என்று அன்பாக தலையை கோதி விட்டு போய் வா என்று வழியனுப்பி வைப்பார்,

ஆத்மாவும் சரியென்று தலையாட்டி விட்டு ஒரு கர்ப்பத்தில் சென்று பதிந்து விடும். மறுபடியும் பத்தாவது மாதத்தில் இறை சம்பந்தம் அறுந்து தலை கீழாக விழுந்து பிறக்கும்.

மறுபடியும் வாழ்கை என்ற பெயரில் வாழ்ந்து பாவங்களை செய்து பிராணன் பிரியும் நேரத்தில் திரும்பவும் ஆயுள் முடியும் பொழுது பரமாத்மாவின் ஞாபகம் வரும். பிறகு வழக்கம் போல் மேலே நீங்கள் இதுவரை படித்த போராட்டம் நடைபெறும்.

நாம் செய்ய வேண்டியது என்ன ?

இந்த பிறவியில் நமக்கு ஞானம் பிறந்து விட்டது. பிறப்பின் லக்ஷியம் தெரிந்து விட்டது. செய்த பாவ புண்ணியங்களை பற்றி கவலைப்படாமல் நல்ல முறையில் வாழ்ந்து பரமாத்மாவிடம் சரணாகதி செய்து பிறப்பே இல்லாத நம்முடைய சொந்த வீடான இறை சாம்ராஜ்யத்தை அடைவோம்.

உங்களுக்கு பிறப்பு போதும் என்று நினைத்து இறைவனை அடைய விரும்பினால் நான் எப்படி சரணாகதி செய்வது என்பதை வரும் நாட்களில் எழுதி சமர்ப்பிக்கிறேன்

வரும் காலங்களில் கலியின் விகாரங்கள் கொடுமையாக இருக்கும் போதும் இந்த மானுடப்பிறவி சரணாகதி செய்வோம் இறைவனை சென்றடைவோம்

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர

என்றும் உங்கள் நலன் மட்டுமே நாடும்

GR மாமா

No tags yet.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page