top of page
Search
Writer's pictureMaha Periyava

மனம் பேசும் மௌன மொழிகள்

புலன்களின் வாயிலாக பேசப்படுவது மனித மொழி

புலன்களுக்கு அப்பால் பேசப்படும் மொழி, மௌனம்

மனம் இழந்த நிலை தான் மௌனம்

மௌனத்தில் இறைவன் உங்களுடன் பேசுவான்

ஏனென்றால், மௌனம், இறைவனின் மொழி


உங்களுடன் மௌன மொழியில் பேசுவதற்கு முன் இந்த தலைப்பின் ஆழத்திற்கு சற்று உங்களை அழைத்து செல்ல விரும்புகிறேன் .


இறைவனின் படைப்பில் அற்புதத்திலும் அற்புதம் ஒன்று உண்டென்றால், அது, மனிதன் என்னும் உயிரினம்.. கண்களுக்கு தெரியும் சரீர அமைப்பு. கண்ணுக்கே தெரியாத உள்ளமும் உணர்வுகளும் கொண்ட மனித மனம். இந்த இரண்டையும் சுமக்க சரீரம் என்னும் மனித கூடு.


இந்த பூலோகத்தில் பிறந்து, வாழ்ந்து, இறந்து, நொடிப்பொழுதில், தான் எங்கிருந்து வந்தானோ அதே இடத்திற்கு பயணப்பட்டு விடுகிறான் மனிதன். . வாழ்ந்த வாழ்க்கையின் சுவடுகள் நொடிப்பொழுதில் அடியோடு மறைந்து விடுகிறது. செய்த பாவ புண்ணியங்களை மட்டும் எடுத்துக்கொண்டு , ஆத்மா, அடுத்த சரீரத்தை எடுக்க பயணப்பட்டு விடுகிறது.


இறைவன் மனிதனை படைத்ததோடு நின்று விடாமல், அவன் வாழ்வதற்கு மனம் என்ற ஒன்றையும் கொடுத்து, மனதின் சாம்ராஜ்யத்தில் அவனையே சக்ரவர்த்தியாக வாழ வைத்தான்.


ஒவ்வொரு மனிதனுக்கும், அவனுடைய மனதுடன் அவன் மட்டுமே பேசும் சக்தியையும் கொடுத்தான். மனமும் மனிதனும் பிரிக்கவே முடியாத இரு சக்திகளாக, நொடிப்பொழுதும் வாழ்க்கை என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


மனமும் மனிதனும் பேசிக்கொள்ள ஒரு மொழி வேண்டாமா?. நிச்சயம் வேண்டும். மனிதன் மனதுடன் பேசவும், மனம் மனிதனுடன் பேசவும், இறைவன் மனதுக்கும் மனிதனுக்கும் ஒரு மொழியை கொடுத்தான். அதுதான் மௌன மொழி.


மனிதன் படைத்த மொழிகளுக்கு இலக்கணம் உண்டு. எழுத்துக்களின் எண்ணிக்கை உண்டு. வரம்பு உண்டு. மனித உணர்வுகளை பிரதிபலிக்க மனிதன் எழுத்துக்களை கூட்டி, வார்த்தைகளை உருவாக்கினான் . ஒவ்வொருவரின் புலமைக்கும் கற்பனைக்கும் ஏற்ப, மொழி ஆளுமையை வார்த்தை ஜாலங்களில் காட்டினான் மனிதன் .


ஆனால், இறைவன் படைத்த மௌன மொழிக்கு எல்லைகள் கிடையாது . வார்த்தைகள் கிடையாது. மனிதனின் உணர்வுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து, மனிதன் மனதுடனும், மனம் மனிதனிடமும் மட்டுமே பேசும்மொழி. அதுதான் “மனம் பேசும் மௌன மொழி”.


மனம் மனிதனுடன் பேசும் தருணங்கள் :


மனம், மௌன மொழியில் மனிதனுடன் பேசிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு மனிதனின் சிந்தனையும் ஓய்வே இல்லாமல் உதயமாகிக்கொண்டே இருக்கும்.


உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஒரு குளத்தில் கல் எறிந்தால், முதலில் ஒரு சிறு வட்டம் உருவாகும். அந்த ஒரு சிறு வட்டம், பெரிய பெரிய வட்டமாக வியாபிக்கும். பிறகு, அந்த வட்டம் குளத்தின் கரையை எட்டி விடும் .


இதே போல், ஒரு சிறு வட்டமாக உருவாகும் மனிதனின் சிந்தனை, பெரியதாக வியாபிக்கும் பொழுது, மனம் என்னும் குளத்தின் கரையை தொடும் பொழுது, மனம், மௌன மொழியில் அந்த மனிதனுடன் பேச ஆரம்பிக்கும். உங்கள் அனுபவத்தில் நீங்களும் மனம் உங்களுடன் பேசுவதை உணர்ந்திருக்கலாம்.


மௌன மொழி, தனிமையில் மட்டுமே பேசப்படும் மொழி. மனிதனும் மனமும் தங்களுக்கான தனிமையில் பேசிக்கொள்ளும் மொழி அது. இறைவன் உள்ளத்தையும் உணர்வையும் கொண்ட இந்த மனித சரீரத்தை பிறக்க வைத்தான்.


உடலும் உயிரும் கொண்ட சரீரம் பிறந்தவுடன், மனம் என்ற ஒன்று, பிறந்த சரீரத்துடன் ஒட்டிக்கொள்கிறது. இந்த மனம் எப்படி தோன்றியது?. எங்கிருந்து தோன்றியது.? எப்படி தன்னை சரீரத்துடன் இணைத்து கொள்கிறது. ? இறைவனின் அற்புத படைப்பில் விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.


அந்த எல்லையில்லாத பிரபஞ்சமே நொடிப்பொழுதில் படைக்கப்படும் பொழுது, மனிதன் என்ற படைப்பை உருவாக்க எவ்வளவு நேரம் ஆகி விடப்போகிறது இறைவனுக்கு? இப்பொழுது, மனம் எப்படி சரீரத்துடன் ஐக்கியமாகிறது என்பதை கொஞ்சம் புரிந்து கொள்வோம்.


உங்களுக்கு ஒரு உதாரணம் வாயிலாக, இந்த மனம் என்னும் அற்புதத்தை புரிய வைக்க முயல்கிறேன். நமக்கெல்லாம் நன்றாக தெரிந்த வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இந்த மூன்றையும் எடுத்து கொள்வோம்.


உங்களில் பல பேருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருக்கலாம். வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு- இந்த மூன்றையும் கலந்து வாயில் போட்டு மெல்லும் பொழுது சிவப்பு நிறம் தோன்றுகிறதே .


இந்த சிவப்பு நிறம் எங்கிருந்து வந்தது? சுண்ணாம்பில் இருந்தா ? வெற்றிலையில் இருந்தா ? அல்லது பாக்கில் இருந்தா? உங்களால் சொல்ல முடியுமா? சொல்ல முடியாதல்லவா ? இந்த மூன்றின் கலவை ஏற்படும் பொழுது சிவப்பு நிறம் தோன்றிவிடுகிறது. இதே போல் தான், உடல், உயிர் தோன்றியவுடன், மனம் வந்து உடலுடன் ஐக்கியமாகி விடுகிறது.


மனம் பேசும் மொழி எவ்வளவு வீரியம் மிக்கதோ, அவ்வளவு வீரியம், மனம் பயணிக்கும் மனோ வேகத்திற்கும் உண்டு. ஒளி, ஒலியை காட்டிலும் அசாத்திய வேகத்தில் பயணிக்கக்கூடியது மனம். நினைத்த மாத்திரத்தில் பிரபஞ்சத்தின் எல்லையையே தொட்டு விடும் சக்தி படைத்தது. மனோ வேகம். இனி. மனம் பேசும் மௌன மொழியை பற்றி கொஞ்சம் சிந்திப்போம்.


மனம் பேசும் மௌன மொழியின் தருணங்கள் .


மூன்று சந்தர்ப்பங்களில் மனம், மனிதனுடன் மௌன மொழயில் பேசும்.


முதலில், மனிதனின் சிந்தனை மனதை வியாபித்து விளிம்பில் நிற்கும் பொழுது , மனம், மௌன மொழியில் பேச ஆரம்பிக்கும் இந்த மௌன மொழியின் ஆழம் தான், சிந்தனையயை செயலாக்குகிறது.


இரண்டாவது சந்தர்ப்பம், மனிதன் ஒரு தவறை செய்யும் பொழுது, சமுதாயம் கொடுக்கும் தண்டனையை, “அந்த தண்டனை சரியே”, என்று மனம் ஏற்கும் பொழுது, மௌன மொழி பேசும். செய்த தவறை நினைத்து வருந்தும் பொழுது, மனம் பேசும் ஆறுதல் மொழிதான், அந்த மௌன மொழி.


மூன்றாவது சந்தர்ப்பம், சமுதாயம் தனக்கு அநீதி இழைக்கும் பொழுது , மனிதனுக்கு மனம் கூறும் சமாதானமும் ஆறுதலும் தான் அந்த மௌன மொழி.


வாழ்க்கை என்று சொல்லும் பொழுதே, அது பல மனிதர்களின் கட்டமைப்பில் உருவாக்கப்படும் சமுதாயம் என்பது நம் எல்லோருக்குமே தெரியும்.


சமுதாயத்திற்கு என்று வரையறை, கட்டுப்பாடுகள், வாழ்க்கை நெறிமுறைகள், சட்டதிட்டங்கள், எல்லாமே உண்டு. இந்த கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டு வாழ்பவன் தான் மனிதன். இது தான் சமுதாய வாழ்க்கை என்று ஆனது.


ஆனால், சமுதாய வாழ்க்கையில், எல்லா நேரங்களிலும் மனிதனுக்கு நியாயம் கிடைத்து விடுகிறதா ? இல்லையே! சமுதாய வாழ்க்கை, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது, மனிதன் உருவாக்கிய மொழிகள் மட்டுமே இங்கு சமுதாயத்தை ஆளுகின்றன.


சமுதாய வாழ்க்கையில் போராடியும் கிடைக்காத நீதி, நியாயம், மனிதனின் மனம் என்னும் சாம்ராஜ்யத்தில், கற்பனையில் அவனுக்கு கிடைத்து விடுகிறது. ஒரு மனிதனின் ஏமாற்றங்களுக்கும் கோபங்களுக்கும் வடிகாலாக இருப்பது மனித மனம் மட்டுமே . மனிதன், அவனுடைய மனதுடன் கேட்டு பெறும் நீதி, நியாயம் எல்லாமே, தனி மனிதனை பொறுத்த வரை சரி. .


இங்கு, கற்பனைக்கும் எல்லையில்லை.தண்டனைக்கும் வரையறை இல்லை. தன் நியாயப்படி, தனக்கு அநீதி இழைத்த ஒவ்வொருவருக்கும், தனக்கும், நீதி கேட்டு போராடும் நீதி மன்றம் தான், மனித மனம்.


இங்கு. ஆளுமையில் இருப்பது மௌனத்தில் பேசப்படும் மௌன மொழி மட்டுமே. சமுதாய நீதி மன்றத்தில் நடக்கும் போராட்டத்தில், வாதியும் ஜெயிக்கலாம். பிரதிவாதியும் ஜெயிக்கலாம்.


ஆனால், மனம் என்னும் நீதி மன்றத்தில், வாதி மட்டுமே வெற்றி பெறுவான். பிரதிவாதி எப்பொழுதுமே தோற்றுத்தான் போவான். அப்படியானால், மனம் என்னும் நீதி மன்றத்தில், நீதியே கிடையாதா என்று நீங்கள் கேட்கலாம்.


ஒரு தனி மனிதன் நியாயம் என்று நினைப்பது, சமுதாயத்தை பொறுத்தவரை அநியாயமாக இருக்கலாம் . ஆனால், அவனை பொறுத்தவரை அது நியாயமே .


மனிதனுக்கு எதுவெல்லாம் சௌகரியமோ, அதையெல்லாம் மனம்சொல்லிக்கொண்டே இருக்கும். “நீ நல்லவன்”, என்று மனம் சொல்லுவதை மனிதன் அப்படியே நம்புவான். மனிதனும் அதைத்தானே சமுதாயத்திடம் இருந்து எதிர்பார்க்கிறான்? அவன் நல்லவன் என்பதற்கான காரணங்களையும் மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். இப்படி, சமுதாயத்தில் தனக்கு ஏற்படும் காயங்களுக்கு போடும் மருந்து தான், மனம் பேசும் மௌன மொழி.


இந்த புதிய தொடரை துவங்கும் நானும் இதற்கு விதி விலக்கல்ல. எவ்வளவோ சந்தர்ப்பங்களில், என் மனம், எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டிருக்கிறது.


எனக்கு ஏற்பட்ட என் அனுபவம், உங்களில் பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இப்படி ஏற்பட்ட சந்தர்ப்பங்களை ஒவ்வொன்றாக தொகுத்து, ஒவ்வொரு வியாழக்கிழமையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.


ஒவ்வொரு நாளும் , வாழ்க்கையில் நாம் பேசும் வார்த்தை மொழிகளை எவ்வளவோ கேட்டுவிட்டோம். சிறிது காலத்திற்கு நம் மனம் பேசும் மௌன மொழியை கேட்போமே.


உங்கள் எண்ண பிரதிபலிப்புகளை வார்த்தை மொழியில் என்னிடம் பகிர்நது கொள்ளுங்கள். நாம் இருவருமே, ஒருவர் காயத்திற்கு ஒருவர் மருந்தாக இருக்கலாமே.


வெற்றியில் மௌனம், அடக்கம்

தோல்வியில் மௌனம், ஆத்ம பரிசோதனை

பிரிவில் மௌனம், சோகம்

சந்திப்பில் மௌனம், ஆனந்தம்

இப்படி எத்தனையோ மௌனங்கள்

மனித வாழ்க்கையை

அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன


ஒவ்வொரு வியாழக்கிழமையும், நம் இருவரின் மனங்களும் மௌன மொழியில் உரையாடட்டும். நாம் பட்ட காயங்களுக்கு மனம் பேசும் மௌன மொழி மருந்தாக இருக்கட்டுமே.


மீண்டும் அடுத்த வியாழக்கிழமை சந்திப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர


442 views1 comment

1 Comment


sri karthik tex
sri karthik tex
Oct 28, 2021

I SAW GOD IN THE FORM OF GR MAMA

Like
bottom of page