top of page
Search
Writer's pictureMaha Periyava

மனம் பேசும் மௌன மொழிகள்அத்தியாயம் -1 இதயத்தின் கண்ணீர் மனம்சொல்லும் ஆறுதல்


மனம் பேசும் மௌன மொழிகள்

அத்தியாயம் -1



இதயத்தின் கண்ணீர்

மனம்சொல்லும் ஆறுதல்


உங்களை யாருமே புரிந்து கொள்ளாத உலகில்,

உங்களுக்கென்றே வாழும் ஒரே நண்பன்.

உங்கள் மனம் மட்டுமே;

துன்பம் போன்ற இன்பத்தில்

நீங்கள் இருவருமே கைகோர்த்து நடக்கலாம்

சோகத்தால் துவண்டு விட வேண்டாம்

மௌன மொழி பேசும் மனதுடன் பேசுங்கள்

உங்கள் மனம் லயிக்கும் இடமெல்லாம்

மணம் வீசும் மல்லிகை பூக்கள் தான்


ஒவ்வொரு நாளும், நாம் வாழும் வாழ்க்கையில் எவ்வளவு மனக்கஷ்டங்கள். எத்தனை சோகங்கள். இரவு உறங்கப்போகும் நேரங்களில் நம் இதயம் அழுத நாட்கள் எத்தனை எத்தனை ? தூங்காமல் கண்விழித்து கழித்த நீண்ட இரவுகள் பலப்பல .


அப்பொழுதெல்லாம், தலை சாய்த்து அழ ஒரு தோள் கிடைக்காதா என்ற ஏக்க பெருமூச்சு . கவலைப்படாதே, இதுவும் கடந்து போகும் என்று ஆறுதல் மொழி கூற யாரும் இல்லை.


சூரிய உதயம், உலகிற்கே ஒரு புதிய நாளின் துவக்கம் என்றால், துன்பத்தில் துவளும் ஆத்மாக்களுக்கு, சூரிய உதயம், ஒரு நாளின் அஸ்தமனம். சூரியனின் அஸ்தமனம் நாளின் துவக்கம் . இருட்டு மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பு கவசம். நானும் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருந்தேன்


எத்தனை நாட்கள் என் இதயம் அழுதது. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பொருளாதார இக்கட்டுகள், எதிர்பாராமல் சந்திக்கும் உடல் நல பாதிப்புகள், இவையெல்லாம் எல்லோருக்குமே நிகழக்கூடியது தான்.


ஆனால், ஒரு ஆத்மா, தன்னுடைய உடல் பாதிப்புகளையும் பொருளாதார கஷ்டங்களையும் தாண்டி, லோக க்ஷேமத்திற்காக, தன்னையே அர்ப்பணித்து வாழும் பொழுது, சமுதாயத்தில் ஒரு சிலர், அந்த ஆத்மாவின் புனித எண்ணங்களை களங்கப்படுத்தும் பொழுது, மனிதனும் மனமும் சேர்ந்து கட்டிக்கொண்டு அழுவார்கள். நானும் எத்தனையோ நாட்கள் தனிமையில் அழுதிருக்கிறேன்.


மனிதன் நாள் முழுவதும் அழுதுகொண்டே இருப்பான். ஆனால் மனம், சிறிது நேரத்தில் சுதாரித்து எழுந்துவிடும். பிறகு, தன்னுடைய மொழியான மௌன மொழியில் மனிதனுடன் பேசும்.


ஆனால், மனிதனுக்கு, இப்படிப்பட்ட நெஞ்சை கசக்கி பிழியும் தருணங்களில் குளிரும் நிலவு கூட சுட்டெரிக்கும். . இதம் தரும் தென்றல் கூட உடலை காயப்படுத்தும். “இன்று ஒரு நாள் மட்டும் உறங்கிக்கொள்கிறேன் இறைவா”, என்று இறைவனை கண்ணீர் மல்க கெஞ்சும் நாட்கள் அவை.


சோகத்தை எதற்கு இவ்வளவு ஆழமாக பிழிய பிழிய எழுதுகிறேன் என்று யோசிக்கிறீர்களா? சோகத்தின் உச்சத்தில் தான், மனம், மௌன மொழியில் நம்முடன் பேச ஆரம்பிக்கும்.


சோகத்தை அனுபவித்து பாருங்கள் என்று சொல்வதை விட, நான் அனுபவித்த சோகத்தை வார்த்தைகளால் வடித்து குழைய குழைய உங்களுக்கு பரிமாறுகிறேன்.


சோகத்தில் துவண்டு விடாதீர்கள். சோகத்தின் உச்சத்தில் தான், உங்கள் வாழ்க்கையின் புதிய அத்யாயம் துவங்குகிறது. எனக்கும் இப்படித்தான் ஒரு புதிய அத்யாயம் தொடங்கிற்று.


என் மனம் என்னுடன் பேசிய அனுபவத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கடந்த காலத்திலும் இல்லாமல், எதிர் காலத்திலும் இல்லாமல், நிகழ் காலத்தில் ஒரு வாழும் உதாரணமே உங்களுடன் பேசுகிறது. அனுபவமே வாழ்க்கை .என் அனுபவம் உங்கள் புதிய வாழ்க்கைக்கு வித்தாக அமையட்டும்.


முதலில் எனக்கும் மஹாபெரியவாளுக்கும் நடந்த சம்பாஷணையை எழுதி உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பிறகு, நம்பிக்கையுடன் சமுதாய பணிக்காக நுழைந்த நேரத்தில், எனக்கு காத்திருந்த மிகப்பெரிய சவால்களையும் அவதூறு பேச்சுக்களையும் கேட்டு, என் மனம் துவண்டு சாய்ந்ததையும், அதை தொடர்ந்து, மனம் என்னுடன் பேசி, என்னை தூக்கி நிறுத்தியதையும் எழுதுகிறேன்.


இவ்வளவையும் எழுதுவது என்னுடைய பிரதாபத்தை தம்பட்டம் அடித்துக்கொள்வதற்காக அல்ல. என் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டு "சமுதாய பணியில் ஈடுபடும் யாரும் துவண்டு போய், தன்னுடைய முயற்சியில் தோல்வி அடைந்து விடக்கூடாதே”, என்ற ஆதங்கத்தில் தான் இவ்வளவையும் உங்களுக்கு எழுதி சமர்ப்பிக்கிறேன். நான் என் புத்தகத்தில் கூட எழுதாத பல அந்தரங்க சம்பாஷணையை இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில், மஹாபெரியவா சம்பாஷணையை சொல்லி விட்டு, என் மனம் என்னுடன் பேசியதை, உங்களுக்கு சொல்கிறேன்.


புதிய அத்தியாயத்தின் துவக்கம் :


இந்த நாள் என்னால் மறக்கவே முடியாத நாள். வருடம் 2014 ; மாதம் அக்டோபர்; தேதி 25 ; நாள் சனிக்கிழமை; நேரம் இரவு 10 .30 மணி


பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு, தரையில் தவழ்ந்து கொண்டிருந்த நேரம். என் வாழ்க்கையே நான்கு கால் விலங்கின் வாழ்க்கையை போல ஆகிவிட்டதே என்று கண்கள் மட்டுமல்ல, என் இதயமும் சேர்ந்து அழுது கொண்டிருந்த நேரம்..


இப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு தேவை தானா? என்று மஹாபெரியவாளிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்த நாட்கள் அவை. மற்ற விஷயங்களை என் "என் வாழ்வில் மஹாபெரியவா பாகம் -1 மற்றும் பாகம் -2 புத்தகங்களின் வாயிலாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இன்று என் மனம் என்னுடன் பேசுவது போல, மஹாபெரியவா என்னுடன் பேச ஆரம்பித்த நாட்கள் அவை.


அந்த 10.30 மணி அளவில் மஹாபெரியவா என்னிடம் சொன்னது.


மஹாபெரியவா சம்பாஷணை :


பெரியவா:: "இதோ பாருடா உன்னோட லௌகீக வாழ்க்கை முடுஞ்சு போயிடுத்து. எதுக்காக நீ பிறந்தாயோ, அந்த லக்ஷியம் நிறைவேறப்போகும் நாள் வந்து விட்டது. நான் ஸ்தூலத்தில் செய்து கொண்டிருந்ததை இன்று முதல், ஸூக்ஷ்மத்தில் , லோக க்ஷேமத்திற்காக உன் மூலமாக நடத்தப்போகிறேன்,


எதையும் நான் தான் பண்ணறேன் அப்படிங்கற ஆணவம் உனக்கு வந்துடக்கூடாது. உன் மூலமா நான் பண்ணறேன் அப்டிங்கறதை ஞாபகம் வெச்சுக்கோ.


நான் : பெரியவா, என்னை இயக்குவது நீங்கள். நீங்கள் செய்யும் அற்புதங்கள் எப்படி என் தலைக்கு போகும்? நீங்கள் உங்கள் அத்தனை அற்புதங்களையும் என் இதயத்தோடு தடுத்து நிறுத்தி விட மாட்டீர்களா ?


நாட்கள் நகர்ந்தன . மஹாபெரியவா அற்புதங்கள், குரு பூஜை மூலம் வெளிவரத்தொடங்கிய நாட்கள். அப்பப்பா.. எவ்வளவு கேலி பேச்சுக்கள். கிண்டல்கள்.


என்னிடம் பேசாத மஹாபெரியவா, இவனிடம் மட்டும் பேசுகிறாரா ? யாரை இவன் ஏமாற்றுகிறான். எதையோ கொள்ளை அடிக்க திட்டமிடுகிறான். இன்னும் என்னவெல்லாமோ பேசினார்கள். என்னால் ஒரு கட்டத்தில் தாங்க முடியவில்லை.


அன்று இரவு மஹாபெரியவா காலை கட்டிக்கொண்டு அழுதேன்.நான் மஹாபெரியவாளிடம் சொன்னது.


நான்: பெரியவா, என்னை என்னவெல்லாமோ பேசுகிறார்கள். என்னால் முடியவில்லை . பயமாகவும் இருக்கு. என்னை விட்டு விடுங்கள். என்னோட வாழ்க்கை இன்னும் எத்தனை நாளோ, அத்தனை நாட்கள் வாழ முடியாவிட்டாலும், நாட்களை கழித்து விட்டு சாகிறேன்.


நீங்கள் என்னுடன் பேசுவதை யாரும் நம்ப தயாராக இல்லை . போதும் பெரியவா . என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற திருப்தியுடன் வாழ்ந்து, சாகிறேன். போதும் இந்த சோதனையான விளையாட்டு.


என் புலம்பலுக்கு, பெரியவா என்னை தேற்றி, எனக்கு சொன்ன புதிய கீதை . கலியுகத்தின் கீதா உபதேசம் .சொல்கிறேன், கேளுங்கள்.


பெரியவா: ஏண்டா, இத்தனை கோடி பேரில், உன்னை எதற்கு இரவு முழுவதும் தூங்க விடாமல் செய்து, அதிகாலை காஞ்சிபுரத்திற்கு வரவழைத்தேன்?


நான்: அதுதான் எனக்கு புரியலை பெரியவா .இத்தனை கோடி பேரில் உங்களுக்காக கைங்கர்யம் செய்த பலரையும் விட்டுவிட்டு, எதுக்காக என்னை மட்டும் காஞ்சிக்கு வரவைத்து ஆசிர்வாதமும் அனுகிரஹமும் செய்தீர்கள்?


இதுபற்றி நானும் உங்களிடம் பலமுறை கேட்டுவிட்டேன். நீங்களும் “உனக்கு போகப்போக தெரியும்”, என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். இப்போதாவது சொல்லுங்களேன் பெரியவா.


என் கேள்விக்கு மஹாபெரியவா கொடுத்த பதில், இதோ உங்களுக்காக.


சமுதாயம் உன்னை தூற்றுவதற்கு காரணம் " தன்னால் செய்ய முடியாததை, இன்னொருவன் செய்கிறானே என்ற ஆற்றாமை . அடுத்தவர்கள் வாழ்ந்தால் இன்னொருவருக்கு பொறுக்காது. நன்றாக வாழ்பவனை அழிக்கவும், சமுதாயத்தில் ஒரு சிலர் தயங்காமல் அவதூறு பேசுவார்கள். இது கலி காலத்தின் சாபக்கேடு.


நெஞ்சில் நஞ்சை மறைத்து, நல்லவர் குடி கெடுக்கும் மனிதர்கள் எவ்வளவு பேர். நல்ல காரியத்தின் அர்த்தமே அடுத்தவர் நலன் நாடுவது.


அடுத்தவர் நலன் கூட நாட வேண்டாம். ஆனால், அடுத்தவர் நலனுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழும் ஆத்மாக்களை, தங்களுடைய கடுமையான சொற்கள் மூலம் துடிதுடிக்க வைப்பது, பாவத்திலும் கொடும் பாவ செயல்.


இப்படிப்பட்ட மனிதர்கள், புண்ணியத்தை தேடிக்கொள்ளாவிட்டாலும், நல்ல ஆத்மாக்களின் நல்ல செயல்களை உயிரை கொடுத்தேனும் தடுத்து நிறுத்தி, தீரா பாவத்தை தேடிக்கொள்ள வேண்டாமே.


நல்லவர்களை புண்படுத்தி வாழும் மனிதர்கள் ஆன்மீகத்தில் திளைத்து வாழ்பவர்கள். அடுத்தவர் நலன் பற்றி சிலாகித்து பேசுவார்கள். ஆனால் , அடுத்தவர்கள் வாழ்கிறார்கள் என்றால், அவர்களை அழிக்கவும் தயங்காமல் போராடும் போராளிகளாக உருவெடுத்து விடுவார்கள். நான் ஒட்டு மொத சமுதாயத்தையும் இங்கே சாடவில்லை


அடுத்தவர் நலனுக்காகவே, தங்களையும் தங்கள் சரீரத்தையும் அர்ப்பணித்து வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இப்படிப்பட்டவர்கள் தான் இன்றும் நல்லவர்கள் வாழ்வதற்கு காரணமாக இருக்கிறார்கள்.


நான்: பெரியவா, இத்தனை கோடி பேரில் என்னை தேர்ந்தெடுத்து, உங்கள் அற்புதங்களை செய்ய என்ன காரணம் பெரியவா? நான் உலகத்துக்கும் சொல்கிறேன். எனக்கும் மன நிம்மதி கிடைக்கும். உலகமும் தெரிந்து கொள்ளட்டும், சொல்லுங்கள்.


பெரியவா சொன்னது :


பெரியவா: உன்னோட பிறந்த தேதி என்ன?


நான்: 13 /02 /1954 .


பெரியவா : என்ன கிழமை?


நான்: சனிக்கிழமை


பெரியவா: இப்போ சொல்லறேன் கேட்டுக்கோ. நீ பிறந்த அதே தேதியில், அதே மாதத்தில், அதே கிழமையில் தான், நானும் சன்யாசம் வாங்கிக்கொண்டேன்.


உனக்கு, பல ஜென்மங்களாக, அடுத்தவர் நலன் காக்கும் ஏக்கமும் முயற்சியும் இருந்தது. ஒரு ஈ எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காமல் வாழ்ந்தாய். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். எனக்கு உன்னோட போன ஏழு ஜென்மங்களை பார்க்கமுடியும்.


நான்: என்னோட இளமை காலங்களில், எவ்வளவோ தப்பு செய்து தானே வாழ்ந்தேன்? அது பாவம் இல்லையா பெரியவா? என்னை போன்ற ஒரு பாவியை எப்படி தேர்வு செய்தீர்கள்?


பெரியவா: ஒண்ணு புரிஞ்சுக்கோடா. ஒத்தனோட கர்மாக்கள் தான் அவனை ஆட்டுவிக்கிறது. உன்னோட கர்மாக்கள் முடியும் நேரத்தில் தான், உன்னை நான் காஞ்சிக்கு அழைத்தேன்.


உன்னை நொடிப்பொழுதும் புண்ணியங்களையே செய்ய வெச்சிண்டு இருந்தா, ஜென்மாந்திரத்து பாவங்கள் அத்தனையும் கழிஞ்சு போயிடும்.


அதுக்காக, உன்னோட மனசை பக்குவமாக்கி, சரீர சுத்தி, ஆத்ம சுத்தி பண்ணி, லோக க்ஷேமத்துக்காக உன்னை பிரபஞ்சத்துடன் ஐக்கியப்படுத்தினேன்.


நீயும் புண்ணியத்தை சேர்த்துண்டே இருக்கே. நான் உனக்கு சொல்லி கொடுத்ததை எல்லாம் உனக்குன்னு வெச்சுக்காமே, இந்த உலகத்துக்கும் கொடுக்கறே.


நான்: பெரியவா, நீங்கள் கொடுத்த என்னோட இந்த புனிதமான மனசை யாருமே புரிஞ்சுக்காமே, என்னோட எண்ணங்களை களங்க படுத்திண்டே இருக்காளே பெரியவா?


என் நெஞ்சம் துடிக்கிறது. நான் அடிக்கடி கண்கலங்கி ;போகிறேன். ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் கூட நான் லோக க்ஷேமத்திற்காக உழைக்க தயாரா இருக்கேன், ஆனால், இந்த மன வேதனைக்கு ஒரு வழி சொல்லுங்கள் பெரியவா.


மஹாபெரியவா சொன்ன பதிலில், என் மனம் மட்டும் நிம்மதி அடையவில்லை. மிகப்பெரிய உண்மைகளை உணர்ந்தேன். சமுதாய நலனுக்காக உழைப்பது என்பது, தன்னையே சமுதாயத்திற்கு அர்ப்பணித்து விடுவது என்று பொருள். சமுதாயப்பணியில் ஈடுபடும் பொழுது, பலர் உங்களை பின்னோக்கி இழுக்க தான் செய்வார்கள். இதற்கு யாரும் விதி விலக்கல்ல.


இந்த பதிவில், நானும் மஹாபெரியவாளும் பேசிக்கொண்டதை உங்களுக்கு எழுதி சமர்ப்பித்து விட்டேன். அடுத்த பதிவில், நானும் என் மனமும் பேசிக்கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


அதுவரை உங்கள் மனதுடன் நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். நானும் என் மனதுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.


மௌன மொழி என்பது, வார்த்தைகளால்

அச்சிடப்படாத ஒரு புத்தகம்;

ஒவ்வொரு அத்தியாயமும்

நம்மில் உள்ள குற்றம் குறைகளை தாண்டி

நம்மை உத்தமன், நல்லவன் என்று

நமக்கு இதம் அளிக்கும் வகையில்

மனம் மௌன மொழியில்

நம்முடன் பேசிக்கொண்டே இருக்கும்;

உலகமே இகழ்ந்தாலும் நம்மை புகழும்

ஒரே நண்பன், மனம் பேசும்

மௌன மொழிமட்டுமே;


மனம் நம்மை நல்லவன், வல்லவன் என்று சொல்லும் பொழுதே, நம் மனம் மகிழ்ந்து போகிறதே. நாம் நல்லவனாகவே வாழ்ந்தால், நாம் மட்டுமா மகிழ்ந்து போவோம்? இறைவனும் நம்முடன் சேர்ந்து அல்லவா மகிழ்ந்து போவான்?


நொடிப்பொழுது நல்லவனாக வாழ்ந்துதான் பார்ப்போமே. இறைவனுடன் சேர்ந்து, அந்த இறை அனுபவத்தை பெறுவோமே. காசா, பணமா ? மனதுடன் பேசிப்பாருங்கள். இறைவனாகவே நீங்களும் வாழ்வீர்கள்.


மீண்டும் அடுத்த வியாழக்கிழமை சந்திப்போம்.

ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர



205 views0 comments

Recent Posts

See All

மனம் பேசும் மௌன மொழிகள் தொடர் எண் - 3 - அத்தியாயம் - 2

மனம் என்பது மனிதனை சிறகுகள் இல்லாமல் வானத்திலும் பறக்க வைக்கும்; கால்கள் இல்லாமல் தரையிலும் வாழ வைக்கும். துவண்டு விழும் நேரத்தில், ”...

Comments


bottom of page